Top News

எரிபொருளுக்கு 100ரூபாய் வரை மானியம் சற்றுமுன் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகை

 

சந்தை விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின்" உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்த நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அந்த மானியத்தினால் அதிக பலன் பெறுபவர் யார் என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்"சந்தை விலை ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்த பின்னர், டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் இந்த மானியத்தினால் அதிகம் பயனடைவது யார்? கிராமப்புறத்தில் உள்ள ஒருவர் 5 லீட்டர் டீசல் வாங்கினால், அவருக்கு 500 ரூபாய் மானியம் கிடைக்கிறது. அதேவேளை, ஒரு பெரிய வாகனத்திற்கு 100 லீட்டர் எரிபொருள் நிரப்பப்பட்டால், அந்த நபருக்கு 10,000 ரூபாய் அரசாங்க மானியம் கிடைக்கிறது. எனவே, இந்தச் சிக்கலைத் தீர்க்க தரவு சேகரிப்பில் (Data Collection) அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்." என குறிப்பிட்டார்.


மேலும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய ஜனாதிபதி "இந்த விடயத்தில், கொடுக்கல் வாங்கல்கள் மிக முக்கியமான ஒரு பகுதியாக அமைகின்றன. ஒரு நபரின் பொருளாதார நிலையை அவரது கொடுக்கல் வாங்கல்கள் பிரதிபலிக்கின்றன. அதற்கேற்ப, மானியங்களை வழங்குவதற்கு இதனை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில், மானியங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த சிக்கலான பிரச்சினைக்கு தீர்வுகாண நாம் டிஜிட்டல் அமைப்புகள் மூலமான கொடுக்கல் வாங்கல்களை நோக்கி நகர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போதுதான் உரிய பயனாளிகளுக்கு இந்த மானியங்களை நேரடியாகச் சென்றடையச் செய்ய முடியும்," எனத் தெரிவித்தார்.

Previous Post Next Post