மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (07) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,652.23 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றைய தினம் 71.77 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திடீர் விலை மாற்றத்திற்குப் பின்னால் பல முக்கிய காரணிகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிராந்திய ரீதியான அரசியல் நகர்வுகள் முதலீட்டாளர்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதன்படி, சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வடைந்தமை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நிதிசார் கொள்கை மாற்றங்கள் விலை வீழ்ச்சிக்கு வழிகோலியுள்ளன.
கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை பாரிய ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், அதன் நேரடிப் பிரதிபலிப்பாக இலங்கையிலும் தங்கத்தின் விலை குறைவடைய அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இது ஆபரணத் தங்கம் கொள்வனவு செய்வோருக்கு ஓரளவு சாதகமான செய்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
