TAMIL VIRAL MEDIA

எரிபொருள் விலை உயர்வு

 

அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை நிலவரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


எதிர்காலத்தில் அமெரிக்கர்கள் எரிபொருளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியிருக்குமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ட்ரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.


மாறாக, "இதற்குப் பதிலாக மக்களுக்கு என்ன கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? எமது நகரங்களையோ அல்லது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையோ தகர்க்க முயலும் அணுவாயுதங்கள் இல்லாத ஈரானே அவர்களுக்குப் பதிலாகக் கிடைக்கும்," என்று அவர் தெரிவித்தார்.


தேசியப் பாதுகாப்பிற்காக சில தியாகங்கள் அவசியம் என்பதை அவர் இதன் மூலம் கோடிட்டுக் காட்டினார்.


எண்ணெய் விலை உயர்வு குறித்துப் பேசிய அவர், "ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 200 டொலர் வரை உயரும் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு விலையில் அது இருக்கிறது," என்றார்.


மேலும் அமெரிக்காவின் தற்போதைய நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் "உண்மையில், நமது நாட்டில் எண்ணெய் விலை மற்ற நாடுகளை விடக் குறைவாக உள்ளது. ஏனெனில் நமக்குத் தேவையான அனைத்து எண்ணெய்யும் நம்மிடமே உள்ளது," என ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.


மேலும், அமெரிக்காவிலிருந்து எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து கப்பல்கள் இப்போது அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அமெரிக்காவின் எரிசக்தி தன்னிறைவு மற்றும் ஈரான் மீதான கடுமையான நிலைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உரை அமைந்திருந்தது.