இலங்கை கடற்படையால் 6 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது - களமிறங்கிய தமிழக முதலமைச்சர் விஜய்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், கடந்த 10 ஆம் திகதி அன்று நாட்டுப்படகில் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், சர்வதேச எல்லையைத் தாண்டியதாகத் தெரிவித்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 54 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளதையும், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
