யாழில் சோகம் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி
யாழில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம், மே 02 – யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்றில், கிணற்றில் தவறி விழுந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த மே 01 ஆம் தேதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (19) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த மூன்று மாதங்களாக இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக ஆரம்பக் கணிப்புகள் கூறுகின்றன.
அதனைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
