நிறுத்தப்படும் இலவச பேருந்து சேவை..? பேராபத்தில் போக்குவரத்து கழகம்!
சென்னை : தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தத்தளித்து வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு பகீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கழகங்களின் மொத்தக் கடன் 38,500 கோடியிலிருந்து 52,800 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டு 38,500 கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது 52,800 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் மாதத்துக்கு 610 கோடி ரூபாய் என்ற அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், முறையான Fitness Certificate (FC) இல்லாத 5,480 அரசு பேருந்துகள் தினசரி லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருப்பது பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3,380 பேருந்துகள் கூடுதலாக FC இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன..
பிங்க் பஸ் திட்டத்தால் 15,780 கோடி இழப்பு
.விடியல் பயணம் (பிங்க் பஸ்) திட்டம் சமூக நலன் அடிப்படையில் வரவேற்கப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட நேரடி வருவாய் இழப்பு மட்டும் 15,780 கோடி ரூபாய் என்று சங்கங்கள் தெரிவித்துள்ளன. இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் (விஜய் வெற்றி பயணம்) என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
..பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கையாக, இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களின் கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டி, துறை முழுவதும் திவாலாகும் நிலைக்கு செல்லும் எனத் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புற வழித்தடங்கள் பாதிப்பு
.நஷ்டத்தைத் தாங்க முடியாமல் சுமார் 3,000 கிராமப்புற வழித்தடங்கள் நிரந்தரமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இது கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது...
உடனடி நடவடிக்கை கோரிக்கை
.போக்குவரத்துக் கழகங்களை இந்த மரணப்படுக்கையிலிருந்து மீட்க அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சங்கங்களும் வலியுறுத்தியுள்ளனர். இலவசத் திட்டங்களை சொகுசு பேருந்துகளுக்கு மட்டும் விரிவுபடுத்தாமல், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
..மேலும், அரசு ஊழியர்களுக்கான 9,800 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கி, பழைய பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
..“கவர்ச்சி அரசியலுக்காக ஒரு மாபெரும் பொதுக் கட்டமைப்பை சாகடிப்பது நியாயமா?” என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டின் நரம்பு மண்டலமாக விளங்கும் அரசு போக்குவரத்துத் துறையைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary in English : Tamil Nadu state transport corporations are facing severe financial difficulties. Their total debt has increased from 38,500 crore to 52,800 crore in five years, leading to daily losses of about 20 crore rupees. More than 5,000 buses are operating without valid fitness certificates. Free travel schemes have caused major revenue losses, and further expansions may push the debt beyond one lakh crore, risking rural bus routes.
