16 மாணவர்கள் அவசர பிரிவில் அனுமதி..! உண்மைகளை மூடி மறைத்த பாடசாலை நிர்வாகம்
கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவால் 16 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி, பாடசாலை நேரத்தில் திடீரென மாணவிகள் சிலர் ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் உபாதைகளுடன் அழுதுகொண்டே நோய் காவு வண்டி மற்றும் முச்சக்கர வண்டிகள் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகியது அந்த பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் அங்கிருந்த ஆசிரியரிடம் வினவிய போது,
"அங்கு ஒன்றும் நடக்கவில்லை" எனக் கூறி உண்மையை மறைக்க முயன்றுள்ளார்.
மேலும், "மாணவர்கள் ஏன் அழுகிறார்கள்?" எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்க மறுத்த பாடசாலை நிர்வாகம், ஊடகவியலாளரை வெளியேற்றிவிட்டு பாடசாலையின் பிரதான நுழைவாயினை மூடிவிட்டார்கள்
பாதிக்கப்பட்ட மாணவிகளைப் போன்று, இந்த ஊடகவியலாளரின் மகனும் அதே பாடசாலையில் தான் கல்வி பயின்று வருகிறார். ஒரு ஊடகவியலாளராக மட்டுமன்றி, தன் பிள்ளையின் பாதுகாப்பைக் கருதி கேள்வி எழுப்பிய ஒரு பெற்றோர் என்ற அடிப்படையிலும் கூட அவருக்குப் பதில் சொல்ல பாடசாலை நிர்வாகம் மறுத்தது ஏன் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
பாடசாலை நிர்வாகம் பிரதான நுழைவாயிலை மூடிய போதிலும், நிலைமையைக் கண்காணித்த ஊடகவியலாளர் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களைப் பின்தொடர்ந்து கந்தளாய் ஆதார மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அச்சத்துடன் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்திருந்தனர்.
உணவு சான்றை மறைக்க முயற்சித்த ஆசிரியை
மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ஆசிரியை ஒருவர் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவின் மாதிரியை மருத்துவரிடம் காட்டிவிட்டு, பின்னர் அதனை ஒரு பெற்றோரின் கையில் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஊடகவியலாளர் அந்த உணவை வாங்கிப் பார்க்க முயன்ற போது, பதற்றமடைந்த அந்த ஆசிரியை, "இவரிடம் ஏன் உணவைக் கொடுத்தீர்கள்?" எனக் கூறி, அந்த உணவை ஊடகவியலாளர் கையில் சிக்காதவாறு அவசரமாகப் பறித்து எடுத்துக்கொண்டு அங்கிருந்த பெற்றோரிடம் கொடுத்துள்ளார்.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவின் பின் வழங்கப்பட்ட அன்னாசிப்பழத்தில் இந்த ஒவ்வாமைக்குக் காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர் சமன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும், பாடசாலைத் தரப்பு சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் உண்மைகளை மூடிமறைக்க முற்பட்ட விதம் மற்றும் அவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறை பாடசாலை நிர்வாகத்தின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நிர்வாகம், தவறை மறைக்க முற்படுவது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
