39 வாரக் கர்ப்பத்திலும் கடினமான யோகாசனங்களைச் செய்து அசத்திய பெண் - இணையத்தில் வாதப்பிரதிவாதங்கள்
பெங்களூரைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஒருவர், தனது 39 வாரக் கர்ப்பக் காலத்திலும் கடினமான யோகாசனங்களைச் செய்யும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளமை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த காணொளி, கர்ப்பக் கால உடற்பயிற்சிகளின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு தரப்பினரிடையேயும் மாறுபட்ட கருத்துக்களைத் தோற்றுவித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஷஷி பிரபா திவேதி என்ற யோகா ஆசிரியரே இந்த காணொளியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ‘சக்ராசனம்’ (சக்கர நிலை) உள்ளிட்ட பல கடினமான யோகாசனங்களை மிகவும் இலகுவாகச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அவர் தனது பதிவில் “இது எதையும் நிரூபிப்பதற்காக அல்ல; எனது உடலின் வலிமை மற்றும் நம்பிக்கையின் காரணமாகவே இதனைச் செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதக் களமாக மாறியுள்ளது. பயனர்கள் பலரும், இந்த முயற்சி ஒரு பெண்ணின் வலிமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துகிறதா? அல்லது பிறக்கப்போகும் குழந்தைக்குத் தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்துகிறதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கர்ப்பக் காலத்தில் இவ்வாறான கடினமான பயிற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருவதனால், இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது
