இஷாரா செவ்வந்தி தொடர்பில் சி.ஐ.டியினர் திடுக்கிடும் தகவல்!
கணேமுல்ல சஞ்சீவவை கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து வக்கீல் உடையில் வந்து படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) தடுப்புக் காவலில் உள்ளார்.
இவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் மன்னனான கெஹெல்பத்தர பத்மே, தனது கடத்தல் வலையமைப்பின் மூலம் ஈட்டிய பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணத்தை, சில நாட்களுக்கு ஒருமுறை கம்பஹா ஒஸ்மன் என்பவரிடம் கொண்டு சேர்க்கும் பிரதான முகவராக இஷாரா செவ்வந்தி செயற்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு இஷாரா மூலம் கைமாறும் பல கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை, கம்பஹா ஒஸ்மன் தனது பல்வேறு வர்த்தக மற்றும் வியாபாரங்களில் முதலீடு செய்து, அதனை மிகச் சூட்சுமமாகச் சட்டபூர்வமான பணமாக மாற்றியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இப்போதைப்பொருள் பணப் பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோத முதலீடுகள் தொடர்பாகக் கம்பஹா ஒஸ்மனும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த மாபெரும் கறுப்புப் பணச் சலவை நெட்வொர்க்கில், இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பல முக்கிய புள்ளிகளைத் தேடிக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தற்போது வலைவீசியுள்ளனர்.
அத்துடன், இந்த ஒட்டுமொத்தப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் இருக்கும் பிரதான புள்ளியான கெஹெல்பத்தர பத்மேவிடமும் சிறைக்குள் வைத்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்கக் குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் அதிரடித் திட்டங்களை வகுத்துள்ளனர்.
