TAMIL VIRAL MEDIA

மோசமான செயலில் ஈடுபட்ட தேரருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு


சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வறுமை காரணமாக சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட 10 வயது சிறுவனைத் கடும் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்தியதாக அந்த விகாரையின் விகாராதிபதி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது

குறித்த வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது குறித்த பிக்குவிற்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்மனுதாரரான பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் இல்லாத நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பிக்குவைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இளம் பௌத்த பிக்குவாக விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட முதலாவது நாளிலேயே சிறுவன் ஒருவரைப் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கல்நேவ பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருக்கும் அநுராதபுரம் சிறுவர் குற்றங்கள் தொடர்பான விசேட மேல் நீதிமன்றம் அண்மையில் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.