வித்தியா கொலை வழக்கு மீண்டும் யாழ். மேல் நீதிமன்றில் விசாரணை
யாழ்ப்பாணத்தை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த போது புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த ட்ரயல் அட் பார் விசேட நீதிமன்றம், ஏழு பேரை குற்றவாளிகளாகக் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணைகளில், இரு குற்றவாளிகளை உயர் நீதிமன்றம் விடுவித்ததுடன், ஏனைய ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் உறுதி செய்தது.
இதற்கிடையில், வழக்கு விசாரணை காலப்பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒருவரும், பின்னர் சிறையில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்தனர்.
குறிப்பாக, கடந்த மாதம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், தற்போது உயிருடன் உள்ள ஏனைய மூன்று குற்றவாளிகளுக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வாசித்து காண்பிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான மரண தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இரு நபர்களும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
