TAMIL VIRAL MEDIA

அத்தை மாமா பிள்ளைகளை திருமணம் செய்ய தடை

 

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணத்தடை: ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றம்!


நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சுவீடன் நாட்டு நாடாளுமன்றத்தில் (Riksdag) வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம் ஒன்று அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற நெருங்கிய இரத்த உறவுகளுக்கு இடையே நடக்கும் திருமணங்களை (Cousin Marriage) முற்றிலும் தடை செய்யும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடும்ப அழுத்தங்கள், கௌரவக் கொலைகள் மற்றும் கட்டாயத் திருமணங்கள் மூலம் இளம் பெண்களும் ஆண்களும் ஒடுக்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் மரபணு ரீதியாகப் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளைத் தவிர்த்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுக்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக சுவீடன் அரசு விளக்கமளித்துள்ளது.

உலக நாடுகளுக்கு இடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த சட்டம், வரும் ஜூலை 1ஆம் திகதி (2026.07.01) முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, வெளிநாடுகளில் வைத்து இத்தகைய நெருங்கிய உறவுகளுக்குள் நடத்தப்படும் திருமணங்களும் இனி சுவீடன் நாட்டில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது.

சுவீடனில் வசிக்கும் குடிமக்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்களுக்கும் இந்தச் சட்ட விதிகள் எவ்வித விதிவிலக்குகளும் இன்றி சமமாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அண்டை நாடான நோர்வேயைத் தொடர்ந்து, நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்யும் ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் சுவீடனும் இணைந்துள்ளது.