மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன் குறித்து பகீர் தகவல்
கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும் பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து பணத்தை மோசடி செய்துள்ளமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு குற்றப் புலனாய்வுத் துறை (CID) உட்பட பல காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். சந்தேக நபர், மருத்துவரை கனடாவுக்குக் அனுப்புவதாக கூறியதுடன் , திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து, அவரிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கனடாவுக்குக் குடிபெயரும் கனவுடன் இருந்த அம்பாறை பெண் மருத்துவர், பல வங்கிகளிலும் தனது நண்பர்களிடமும் கடன் வாங்கி, காதலனிடம் கொடுத்துள்ளார். பெண்ணிடம் வாங்கிய பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கனடா கனவு சிதைந்ததால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான பெண் மருத்துவர், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பிசியோதெரபிஸ்ட்டின் மரணம் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வரும், காதலன் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் 3 காவல் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக, பொலிஸார் பயணத் தடையையும் பெற்றுள்ளனர். ஷ்யாமா என்ற 33 வயது பிசியோதெரபிஸ்ட், சந்தேக நபரை சுமார் 8 மாதங்களாக அறிந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர். தன்னை ஒரு மென்பொருள் பொறியாளர் என்று கூறி ஷ்யாமாவை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து, அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகி, கனடாவில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு கனடாவுக்குக் குடிபெயரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, ஷ்யாமாவிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்று வந்துள்ளார். கனடா செல்லும் தனது கனவு நாளுக்கு நாள் சிதைந்து வருவதால் கோபமடைந்த ஷ்யாமா, சந்தேக நபருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தார். இதனையடுத்து 3ஆம் திகதி, சந்தேக நபர், ஷ்யாமாவின் கனடா பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறி, அவரை நுவரெலியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று தங்க்க வைத்துள்ளார். இது குறித்து ஷ்யாமா , தனது சகோதரருக்கும் தொலைபேசியில் தெரிவித்திருந்தார். காதலன் தன்னை ஏமாற்றியதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஷ்யாமா, 4 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்து வந்தார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், இது குறித்து தனது சகோதரரிடமும் தெரிவித்திருந்தார். ஷ்யாமாவின் சகோதரர் இது பற்றி நுவரெலியா காவல்துறைக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இதற்கிடையில், 16ஆம் திகதி மாலையில், காதலன் நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து, வாடகையைச் செலுத்திய பிறகு ஷ்யாமாவை அங்கிருந்து அழைத்துச் சென்றார். பல நாட்களாக உணவு உண்ணாததால் ஷ்யாமாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறுகிந்றனர் . இருப்பினும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த துல்லியமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. பெண்ணின் காதலன் என்று கூறப்படும் சந்தேக நபர் வழுக்கைத் தலையுடையவர் என்றும், அவர் இளம் பெண்களை ஏமாற்றுவதற்காகப் போலி முடியைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சமரகோன் பண்டாவின் அறிவுறுத்தல்களின் பேரில் தலைமறைவான காதலனை தேடி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
