பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடைமை!
பெற்றோரின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு, அவர்களைக் கைவிட்டுச் செல்லும் பிள்ளைகளிடமிருந்து சொத்துக்களை மீள கைப்பற்றும் வகையில் புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சூரியன் செய்திப் பிரிவுக்குக் குறிப்பிட்டார்.
அதன்படி, பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களை அரசு பொறுப்பேற்றுப் பராமரிக்கும் எனவும் அவர் கூறினார்.
எனினும், பெற்றோரின் சொத்துக்கள் பிள்ளைகளிடம் இருந்தால், அவற்றை அரசுடைமையாக்கும் வகையில் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பெற்றோரின் சொத்துக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களைக் கைவிடுவதென்பது, மிகக் கொடூரமான செயல் எனவும், அது, பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனாலேயே, கைவிடப்படும் பெற்றோர்களின், பிள்ளைகளிடமிருக்கும் சொத்துக்களை அரசுடைமையாக்கும் வகையில் புதிய திட்டங்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் அல்லது, தொந்தரவுகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள் உடனடியாக தகவல்களை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சூரியன் செய்திப் பிரிவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
