பெண் வைத்தியரின் மரணம் பல திடுக்கிட வைக்கும் அதிரடி தகவல்கள் போலி காதல் பண மோசடி...
போலி காதல் : 1.5 கோடி ரூபா மோசடி : அம்பாறை வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஷ்யாமா தர்ஷனியின் மரண மர்மம்
..............................................................................................
அம்பாறை பொது வைத்தியசாலையில் Physiotherapist ஆக பணியாற்றிய 33 வயதான ஷ்யாமா தர்ஷனியின் மரணம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரண மரணம் அல்லது தற்கொலை எனக் கருதப்பட்டாலும், பின்னர் வெளிவந்த தகவல்கள் இந்தச் சம்பவம் மிகவும் சிக்கலான மோசடி மற்றும் சந்தேகத்திற்குரிய மரணமாக மாறியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
🛑 அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்க்கை
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பகுதியைச் சேர்ந்த ஷ்யாமா தர்ஷனி, குடும்பத்தின் இளைய பிள்ளை. "ஷ்யாமா என்னை விட 16 வயது இளையவர் என்பதால், தந்தையை போல் அவளை வளர்த்தேன்" என அவருடைய மூத்த சகோதரர் சமந்த குமார குறிப்பிட்டுள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கிய ஷ்யாமா, வெலிகம சுமங்கல மகளிர் கல்லூரியில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார். சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் மருத்துவ பீட வாய்ப்பை இழந்தாலும், பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் Physiotherapist பட்டப்படிப்பை முடித்தார். அதோடு மனநல சிகிச்சை தொடர்பான உயர் கல்வியையும் சிறப்பாக முடித்து, அம்பாறை பொது வைத்தியசாலையில் தனது நியமனத்தை பெற்று அரச சேவையை ஆரம்பித்தார்.
🛑 திருமணத்தைத் தவிர்த்து வந்த ஷ்யாமா
33 வயது வரை திருமணத்தில் ஆர்வம் காட்டாத ஷ்யாமாவிற்கு, அவரது குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண வரன்களை கொண்டு வந்தனர், எனினும் அனைத்தையும் ஷ்யாமா வேண்டாம் என மறுத்துவிட்டார். “நான் திருமணம் செய்ய மாட்டேன், ஆன்மீக வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பேன்” என்று அடிக்கடி ஷ்யாமா கூறியிருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு திடீரென தனது சகோதரரிடம், தன்னைப் புரிந்துகொள்ளும் ஒருவர் கிடைத்திருப்பதாகவும், அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
🛑 போலியான அடையாளத்தில் வந்த காதலன்
ஷ்யாமா அறிமுகப்படுத்திய அந்த நபர், தன்னை “தினேத் திசாநாயக்க” என அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிவதாகவும், 15 பேர் கொண்ட குழுவை வழிநடத்துவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், கண்டி கன்னொருவ பகுதியைச் சேர்ந்த உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தலதா மாளிகையுடன் தொடர்புடைய திசாநாயக்க முதலியாரின் மகன் என்றும், ஷ்யாமாவைத் திருமணம் செய்து குடும்பத்திலிருந்து விலகி எளிமையான வாழ்க்கை வாழத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஷ்யாமாவுக்கு இந்த நபரை அறிமுகத்தை ஏற்படுத்தியவர் அம்பாறை கச்சேரியில் பணியாற்றிய பெண் ஒருவர் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
🛑ஷ்யாமாவின் குடும்ப நம்பிக்கையை வென்ற விதம்
தன்னை நம்ப வைக்க அவர் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
* வெள்ளை நிற WagoneR வாகனத்தில் ஷ்யாமாவுடன் குடும்ப வீட்டிற்கு வந்தார்.
* ட்ரோன் கேமராவை பயன்படுத்தி ஷ்யாமாவின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் நெருக்கமாக பழகினார்.
* “Drone Uncle” என குழந்தைகள் அழைக்கும் அளவுக்கு அவர்களின் அன்பைப் பெற்றார்.
* வங்கி கடனுக்காக ஷ்யாமாவின் சகோதரரிடமிருந்து 300,000 ரூபா பெற்று அதை நான்கே நாட்களில் திரும்ப செலுத்தி குடும்பத்தினரின் நம்பிக்கையை மேலும் பெற்றார்.
* கதிர்காம யாத்திரையின் போது VIP நுழைவாயில் வழியாக ஷ்யாமாவின் குடும்பத்தினரை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று தனது செல்வாக்கை வெளிப்படுத்தினார்.
🛑 1.5 கோடி ரூபா மோசடி
சில நாட்களின் பின்னர் ஷ்யாமா கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தார். கூடவே அவரது நடத்தையும் மாறியிருந்தது. அதிக மன அழுத்தத்துடனும் கவலையுடன் காணப்பட்டார்
அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது, கனடாவுக்கு குடிபெயர்வதற்கான ஆவணங்களைத் தயாரிப்பதாகக் கூறி, பல்வேறு நபர்களிடமிருந்தும் வங்கிகளிலிருந்தும் 15 1.5 கோடி ரூபா கடன் பெற்று அந்தப் பணத்தை அப்படியே தினேத்திடம் கொடுத்ததாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார் ஷ்யாமா.
ஆனால் அந்தப் பணம் தினேத்தின் வங்கிக் கணக்கில் அல்லாமல், தினேத்தின் குடும்ப சொத்துக்களின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் நபர் என தினேத்தால் குறிப்பிடப்பட்ட "சங்க" என்ற நபரின் கணக்கில் வைப்பிலிட்டதாகவும் ஷ்யாமா தெரிவித்தார்.
பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறி 750,000 ரூபா பெறுமதியுள்ள இரண்டு காசோலைகளை தினேத் ஷ்யாமாவிடம் கொடுத்ததாகவும், பின்னர் அது போலியானது என தெரிய வந்ததாகவும், தினேத் தன்னை ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
🛑 ஷ்யாமாவின் மரணத்திற்கு முந்தைய கடைசி அழைப்பு
கடன் வழங்கியவர்களின் அழுத்தம் அதிகரித்த நிலையில், ஷ்யாமா அம்பாறை வைத்தியசாலையில் இருந்த பணியை விட்டு விலக முடிவு செய்தார்.
நுவரெலியாவில் உள்ள “Grand Falls Residences” எனும் விடுதியில் மாதாந்த அடிப்படையில் அறையொன்யொன்றை பெற்று தங்கியிருந்தார்.
ஜூன் 16 ஆம் திகதி தனது சகோதரரிடம் அழைத்துப் பேசிய ஷ்யாமா,
கடுமையான தலைவலியால் அவதிப்படுவதாகவும், 700,000 ரூபா கடன் கொடுத்தவர் பணத்தைத் திரும்பக் கேட்பதாகவும், தினேத் 200,000 ரூபா அனுப்புவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அன்று மாலை மீண்டும் தனது சகோதரருக்கு அழைத்த ஷ்யாமா மிகவும் பயந்து போன குரலில் பேசியுள்ளார்.
“தினேத் என்னைப் பின்தொடர்கிறார். அவர் எனக்கு எந்தப் பணமும் தரப்போவதில்லை. வெளியே செல்ல கூட எனக்கு பயமாக இருக்கிறது,” என்று கதறியபடி கூறியுள்ளார்.
இந்த விடமய் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என்றும், அப்படிச் செய்தால் தனது பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்றும் ஷ்யாமா தனது சகோரதரிடம் வேண்டிக்கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு தன்னுடைய சகோதரருடன் உரையாடிக்கொண்டிருந்த ஷ்யாமா, "அவர் தான் அழைக்கிறார்.. நான் உங்களுக்கு பிறகு அழைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
அதுவே குடும்பத்தினருடன் அவர் பேசிய கடைசி உரையாடலாக அமைந்தது. அதன்பின் அவரது தொலைபேசி செயலிழந்தது.
🛑உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த CCTV காட்சிகள்
சந்தேகமடைந்த ஷ்யாமாவின் சகோதரர் உடனடியாக நுவரெலியா சென்று, தனது சகோதரி தொடர்பில் நுவரெலியா பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்தார்
முறைப்பாட்டுக்கு அமைய, ஷ்யாமாவின் சகோதரரை அழைத்துக்கொண்டு அவர் குறிப்பிட்ட விடுதிக்கு சென்ற பொலிஸார், விடுதி முகாமையாளரிடம் விசாரித்தனர்.
அறை பூட்டி இருப்பதாக தெரிவித்த முகாமையாளர், தினேத்துக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். மறுமுனையில் பேசிய தினேத், "ஷ்யாமாவின் சகோதரரும் பொலிஸாரும் வந்திருக்கிறார்கள்" என முகாமையாளர் சொல்லவும், உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டு தப்பி சென்றுள்ளார்.
அதன்பின், பொலிஸார் ஷ்யாமா தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, அது முற்றிலும் காலியாக இருந்தது. ஒரு பற்பசையும் பற்தூரிகையும் மட்டுமே அங்கு இருந்தது.
அதனைத்தொடர்ந்து விடுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா காட்சிகள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டது.
அவற்றில்,
*ஜூன் 16 இரவு 9.50 மணியளவில் தினேத் வெள்ளை நிற WagoneR வாகனத்தில் வந்து ஷ்யாமாவின் பொருட்களை ஏற்றிச் செல்வது பதிவாகியுள்ளது.
*இரவு 10.28 மணியளவில், ஷ்யாமாவின் உடலை இடுப்பைப் பிடித்தபடி தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
*அவரது தலை கருப்பு ஜாக்கெட்டால் மூடப்பட்டிருந்தது.
*விடுதியின் பாதுகாப்பு காவலரிடம் “என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை, சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறேன்” என்று தினேத் தெரிவித்துள்ளார்.
🛑 தெல்தெனியாவில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
ஜூன் 17 ஆம் திகதி காலை, ஷ்யாமாவின் அக்காவிற்கு அழைத்த தினேத், தாம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருப்பதாகவும், இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.
அதே நாளில் பிற்பகல் 2.00 – 3.00 மணிக்குள் தெல்தெனியா பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்தது.
அதன் அடிப்படையில், தெல்தெனியா அரச வைத்தியசாலையின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த CBR 2061 இலக்கமுடைய WagoneR வாகனத்திற்குள் ஷ்யாமாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த தகவலை வழங்கியவரும் குற்றவாளியே என விசாரணையில் தெரியவந்துள்ளது.
🛑 உடற்கூறு பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி
சடலத்தில், மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வெளியேறியிருந்தது.
கழுத்தில் நெரித்ததற்கான காயங்கள் இருந்தன.
கடுமையான போராட்டத்தின் அடையாளங்கள் உடலில் காணப்பட்டன.
தலைமுடி சிதறியிருந்தது.
கணுக்காலுக்கு மேல் Cannula பொருத்தப்பட்டிருந்தது.
அதனை கைக்குட்டையால் இறுக்கமாக கட்டியிருந்தனர்.
ஏதோ ஒரு திரவம் உடலுக்குள் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கை, கால் ஆகியவற்றில் முறிவு அல்லது கடுமையான காயங்களின் அடையாளங்களும் காணப்பட்டன.
இதனால், இது விஷம் செலுத்தப்பட்ட மரணமா, அல்லது சித்திரவதை செய்யப்பட்ட கொலையா என்பது குறித்து நீதிமன்றம் திறந்த தீர்ப்பை (Open Verdict) வழங்கியுள்ளது.
🛑 முக்கிய சந்தேகம் – WagoneR வாகனம்
விசாரணையில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட WagoneR வாகனம் அம்பாறை கச்சேரியில் பணிபுரியும் திலினி என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அந்த வாகனத்தை வாங்குவதற்கு திலினியும் தினேத்தும் இணைந்து பணம் செலுத்தியிருந்ததாகவும், பின்னர் அதை தினேத் பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
🛑 உண்மையில் "தினேத் திசாநாயக்க" யார்?
பின்னர் நடைபெற்ற விசாரணைகளில், “தினேத் திசாநாயக்க” என்ற பெயர் போலியானது என்பது தெரியவந்தது. அவர், கொஸ்கொல்ல-ஹொரம்பாவ என்ற முகவரியைச் சேர்ந்த ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவியான ரத்நாயக்க முதியான்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க என்பவரும் இந்த மோசடிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் தனது தோற்றத்தைக் மறைக்க செயற்கை முடி (Wig) அணிந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம் பெற்று நிதி மோசடி செய்து வருபவர் என தெரிய வருகின்றது.
பிரதான சந்தேகநபர் மீது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்
📍 கம்பஹா மேல் நீதிமன்றம் (வழக்கு எண் B 1893/19) - திருமணம் செய்வதாகக் கூறி 11,873,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை மற்றும் WP CBG 8532 என்ற இலக்கமுடைய காரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மோசடி செய்தமை.
📍 புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றம் (வழக்கு எண் B 98858/05/2018) - திருமணம் செய்வதாகக் கூறி 1,721,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
📍 புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றம் (வழக்கு எண் B 15191/05/2019) - திருமணம் செய்வதாகக் கூறி 1,376,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
📍திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் (வழக்கு எண்கள் B 33176, 33174) - வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 2,200,000/- ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
📍 புதுக்கடை நீதிமன்றம் (வழக்கு எண் B 7002/23) - வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 4,200,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை.
📍 இவற்றுக்கு மேலதிகமாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இவருக்கு எதிராக புதுக்கடை (B 88175/18, B 2 1763), ஹொரண (B 35175/18) மற்றும் கடுவலை (B 12025/18) ஆகிய நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
📍 சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் (198333704184) ஊடாக VPN வழியாக AMIS தரவுக்கட்டமைப்பை பரிசோதித்த போது, பேலியகொடை பொலிஸ் நிலையத்தினால் மற்றும் மோசடி விசாரணைப் பிரிவினரால் 2023.11.13 அன்று அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதுடன், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதமான பண மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் மனைவியான நெத்மி அமாயா ரத்நாயக்க மீது நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள்
📍 வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் - INV/147/2309/13/09/2023 இன் கீழ் நிலுவையிலுள்ள விசாரணைகள்.
📍 பேலியகொடை (SCIB) - ஆவண இலக்கம் 332/143 இன் கீழ் நிலுவையிலுள்ள விசாரணைகள்.
📍 பேலியகொடை பொலிஸ் (வெலிசர) - B /4270/23 வழக்கு.
📍 ஜா-எல பொலிஸ் - CIB 11 388/75 இன் கீழ் உள்ள முறைப்பாடுகள்.
📍 திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து 2,500,000/- ரூபாய் பணம் மோசடி செய்தமை - (2023.11.15 திகதியிட்ட MOIB -396/48).
🛑 சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை
உயர்கல்வி பெற்ற, அரசாங்கத்தில் பணிபுரிந்த, புத்திசாலித்தனமான பெண்ணாக இருந்த போதிலும், சமூக விழிப்புணர்வு குறைபாடு மற்றும் போலி காதல் வலையில் சிக்கியதால் ஷ்யாமா தர்ஷனி 1.5 கோடி ரூபா பணத்தை இழந்து இறுதியில் தனது உயிரையும் இழந்துள்ளார்.
இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மற்றும் அறிமுகமில்லாத உறவுகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து பெண்கள் மட்டுமின்றி அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
