TAMIL VIRAL MEDIA

முச்சக்கர வண்டி,உந்.து.ருளி வைத்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கான விசேட தன்சல் இதோ!

 

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விசேட "வாகன சீரமைப்புத் தானம்" (Vehicle Tuning Dansala) நடத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வாகனக் கட்டமைப்பில் பெரும்பகுதியாகக் காணப்படும் உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள், நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகப் பல சந்தர்ப்பங்களில் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும், இதனால் சூழலுக்கு வெளியாகும் தீங்கிழைக்கும் புகையின் அளவு அதிகரித்துள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சூழல் மாசுபாட்டைக் குறைத்து, வாகனங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் புகை விநியோக நம்பிக்கை நிதியத்தினால் (Motor Vehicle Emissions Trust Fund) தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட திட்டத்தின்கீழ், உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் நாட்டின் மிகச் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து தங்களது வாகனங்களை எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகச் சீரமைத்துக் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் மூலம் வாகனங்களின் எரிபொருள் செயல்திறன் அதிகரிப்பதுடன், வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற எரிபொருள் செலவினங்களைக் குறைக்கவும், சூழலுக்கு வெளியாகும் நச்சுப் புகையின் அளவைக் கணிசமாகக் கட்டுப்படுத்தவும் முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.