TAMIL VIRAL MEDIA

வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி சில காலம் நிறுத்தப்பட்டிருந்தது. நாங்கள் நீண்ட காலமாக வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் மூலமே செய்து வருகிறோம். அந்த வகையில், உரிய கொள்முதல் நடைமுறைகளின்படி நாங்கள் கொள்முதல் பணிகளை ஆரம்பித்தோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், தரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய, அந்த நிறுவனத்தின் ஊடாக அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான நாளாக இன்றைய தினத்தை நிர்ணயித்திருந்தோம். அதன்படி தற்போது சுமார் அச்சிடப்படாத ஆறு இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் தேங்கிக்கிடக்கின்றன. நாங்கள் ஒப்பந்தத்தை வழங்கிய நாளில் இருந்து கணக்கிட்டால், அச்சிடுவதற்கு சுமார் ஒன்றரை இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் உள்ளன. அவற்றை அச்சிடும் பொறுப்பு இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு உள்ளது. எஞ்சிய பகுதியை எவ்வாறு அச்சிடுவது, இந்த நிறுவனத்தின் மூலமாகவா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எதிர்காலத்தில் இந்தத் தேக்க நிலையை முழுமையாகத் தீர்க்க முடியும் என நம்புகிறோம். தற்போது தினசரி கிடைக்கப் பெறும் அனைத்து இலக்கத் தகடுகளையும் அச்சிட்டு விநியோகிக்கும் திறன் உள்ளது. அத்துடன், ஒருவர் தனது வாகனத்தைப் பதிவு செய்து, இலக்கத் தகடு அச்சிடப்பட்டு இங்கிருந்து வெளியேறியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அது குறித்த குறுஞ்செய்தி ஒன்று செல்லும் புதிய முறையையும் நாம் ஆரம்பித்துள்ளோம் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.