TAMIL VIRAL MEDIA

இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

 

2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) வாகன இறக்குமதிக்காக 1,071 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் வெளிநாட்டுத் துறையின் செயல்திறன் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டு இறுதி முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 7.9 சதவீதம் சரிந்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 4.7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும், 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் அது 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதிச் செலவினம் வேகமாக அதிகரித்ததே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகும்.


குறிப்பாக, மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 112 சதவீதம் உயர்ந்து 536 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புகைகள் அதிகரித்த போதிலும், விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையின் தாக்கத்தால் 2026ஆம் ஆண்டு மே மாதத்தில் 194 மில்லியன் அமெரிக்க டொலர் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதேவேளை, ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 இலட்சத்தைத் தாண்டியிருந்தாலும், சுற்றுலா வருவாய் 11.9 சதவீதம் குறைந்து 1,360 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.