TAMIL VIRAL MEDIA

அனோஜன் தொடர்பில் ஐனாதிபதி சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டம், கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உயர்மட்டத்தில் தீவிரப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகிறது

அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்குத் தேவையான சட்ட, இராஜதந்திர மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஜனாதிபதி இவ்வாறான நேரடி பணிப்புரையை வழங்கியமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை நேற்று வரை வெளியிடப்படவில்லை. அனோஜனின் வழக்கை அரசாங்கம் மிக நெருக்கமாகக் கண்காணிப்பதுடன் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

மரண தண்டனை குறித்து எழுத்துமூல தீர்ப்பு இல்லை

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சவூதி நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ எழுத்துமூல தீர்ப்பு இலங்கைத் தூதரகத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

இதனால் மரண தண்டனை குறித்த இறுதி சட்ட நிலைமை, அதற்கான சட்ட அடிப்படை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எழுத்துமூல தீர்ப்பைப் பெற்ற பின்னரே முழுமையான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அந்தத் தீர்ப்புக்கு எதிராக சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்குள் மேன்முறையீடு செய்ய முடியும் என அனோஜனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் பதிவு ஏற்படுத்திய விபரீதம்

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.

சமூக ஊடகத்தில் இடம்பெற்ற மதம் தொடர்பான விவாதமொன்றின்போது அவர் வெளியிட்ட கருத்து இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து சவூதி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு அல்அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின் பின்னர் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையைக் குறைக்கும் நோக்கில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை (17) நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையில் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தும் சவூதி நீதிமன்றத்தின் எழுத்துமூல தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்பதால், வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரத்தை மிகுந்த அவதானத்துடன் கையாள்கிறது.

தாயாரின் கண்ணீர் கோரிக்கை

இதற்கிடையில், அனோஜனின் தாயார் சிவராசா யோகலட்சுமி, தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அரசாங்கத்திடமும் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனது மகன் செய்த தவறை மன்னித்து, சவூதி அரசாங்கத்துடன் பேசி அவரை மீட்டுத்தர வேண்டும் என அவர் கோரியுள்ளார். மரண தண்டனை தொடர்பான தகவல் வெளியான பின்னர் அனோஜன் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அரசியல் தரப்புகளிடமிருந்தும் அழுத்தம்

இந்த விவகாரம் தற்போது கட்சி அரசியலைத் தாண்டிய மனிதாபிமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அனுபவமிக்க சுயாதீன சட்டத்தரணிகளை நியமித்து, எஞ்சியுள்ள அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவதுடன் உயர்மட்ட இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

அதேவேளை, மேன்முறையீடு கையாளப்பட்ட விதம் தொடர்பாகவும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் இந்த விடயத்தில் அமைச்சர் விஜித ஹேரத்துடனும் ஜனாதிபதியின் செயலாளருடனும் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியையும் இலங்கை நாட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். இந்தியப் பிரதமருக்கும் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையிலான உறவைப் பயன்படுத்தி மனிதாபிமான அடிப்படையில் அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்பதே அவரது கோரிக்கையாகும்.

இராஜதந்திரப் பாதையே முக்கியம்

அனோஜனின் விவகாரத்தில் தற்போது இரண்டு பாதைகளில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒன்று, சவூதி சட்டத்தின்கீழ் எஞ்சியுள்ள மேன்முறையீட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துவது.

மற்றொன்று, இலங்கை – சவூதி இருதரப்பு உறவுகளின் ஊடாக மனிதாபிமான அடிப்படையிலான மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதாகும்.

வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்துடன் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளதுடன், அனோஜனின் குடும்பத்தின் கவலையையும் சவூதி தரப்பிடம் எடுத்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகமும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி மட்டத்திலான தலையீடும் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இராஜதந்திர முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டால், சவூதி அரசின் உயர்மட்டத்தில் மனிதாபிமான கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் சவூதி நீதித்துறையின் சட்ட நடைமுறைகளை மதித்தவாறு இறுதி சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்துவதும் மறுபுறம் அரச மன்னிப்பு உள்ளிட்ட மனிதாபிமான வழிகளைத் தேடுவதுமே தற்போது அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான பிரதான முயற்சிகளாக மாறியுள்ளன.