TAMIL VIRAL MEDIA

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட ஒத்திவைப்பு கோரிக்கைகளை நிராகரித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உயர்தரப் பாடத்திட்டத்தை முறையாக நிறைவு செய்வதற்கு 300 பாடசாலை நாட்கள் தேவை என்று தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள், கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 2026 ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை 343 பாடசாலை நாட்கள் கற்றல் வழிகாட்டல்களைப் பெற்றுள்ளனர் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, முன்னைய பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதற்கும் வரவிருக்கும் பரீட்சை திகதிக்கும் இடையில் நான்கு மாதங்களும் 10 நாட்களும் இடைவெளி கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளதால், திட்டமிடப்பட்ட பரீட்சை கால அட்டவணையை மாற்றுவதற்கோ அல்லது ஒத்திவைப்பதற்கோ எந்தவொரு அவசியமும் இல்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.